பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்கா நேற்று (21) அறிவித்துள்ளது.
இந்த மனிதாபிமான நிதியுதவி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண உதவி, குறுகிய கால வேலைகள் மற்றும் விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை வழங்குவதற்கு உதவும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படும் முன்றாவது தவணை நிதியுதவி இதுவாகும்.
ஏற்கனவே, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபையின் ஊடாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகவும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் ஊடாக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகவும் வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.