தம்புள்ளை − கலேவெல − மக்குலுகஸ்வெவ பகுதியில் தனது மூன்று குழந்தைகளின் தலைகளுக்கு கடுமையாக தாக்கி காயப்படுத்தி தந்தையொருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (12) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் தனது குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக எண்ணியே, தந்தை தற்கொலை செய்துக்கொண்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி, சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மனவிரக்தியிலிருந்த தந்தை, இன்று அதிகாலை நித்திரையிலிருந்த பிள்ளைகளை, பொல்லால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் 13, 8 மற்றும் 5 வயதாக மூன்று பிள்ளைகளே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்தே, வீட்டிற்கு அருகிலிருந்த மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் தனது பேஸ்புக்கின் வெள்ளை நிற கொடி ஒன்றின் படமொன்றை பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்களையும், அயலவர்களின் உதவியுடன் உறவினர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்தில் 36 வயதாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)