லங்கா IOC நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரக ஒரு லீட்டர் டீசலுக்கான விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.
ஒரு லீட்டர் டீசலில் புதிய விலை 214 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 254 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.லங்கா IOC நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி தமது எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.
ஒரு லீட்டர் பெற்றோலுக்கான விலையை 20 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலுக்கான விலையை 15 ரூபாவாலும் கடந்த மாதம் IOC நிறுவனம் அதிகரித்திருந்தது.
அதேபோன்று, கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதியும் IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்திருந்தது.
நாட்டின் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை மற்றும் ரூபாவின் பெறுமதி குறைவடைகின்றமை ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவிக்கின்றது.
தமது நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்காத வகையில், மக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டுமானால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் புதிய விலை உயர்வு மற்றும் நாட்டிற்குள் ரூபாவின் பெறுமதி குறைவடைதல் ஆகியவற்றை அவதானித்தே, இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவிக்கின்றார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த 7 நாட்களுக்குள் 57 ரூபா வரை அதிகரித்துள்ளமையானது, எரிபொருளை நாட்டிற்குள் தரையிறக்கும் போது, அது நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறுகின்றார். (TrueCeylon)