ஆசிய நாடுகளில் கண் பார்வை தொடர்பான பிரச்சினை அதிகமாக இலங்கையில் காணப்படுவதாக கண் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவில் 0.4 வீதமாகவும், நேபாளத்தில் 0.34 வீதமாகவும் கண் பார்வை தொடர்பான பிரச்சினை காணப்படும் நிலையில், இலங்கையில் 1.1 வீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டின் சுகாதார துறை கட்டமைப்பு சிறந்த முறையில் காணப்படுகின்ற போதிலும், பார்வை தொடர்பான பிரச்சினையில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் நாடு காணப்படுகின்றமை மிகவும் கவலையளிப்பதாக கண் நோய் தொடர்பான விசேட நிபுணர் நரேஷ் பிரதான் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன், பார்வை தொடர்பான சிக்கல்கள் குறித்து அறிந்துக் கொள்வது இன்றியமையாத விடயமெனவும் கூறியுள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கண் நோய் தொடர்பான விசேட நிபுணர் நரேஷ் பிரதான் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பார்வை தொடர்பான சிக்கல்கள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க Ceylon Eye Care Optometric Association தயாராகவுள்ளதாக அதன் நிறுவுனர், கண்நோய் தொடர்பான விசேட நிபுணர் நரேஷ் பிரதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ரீதியில் செயற்படும் தமது நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்தியாவதை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இணையதள பாவனை அதிகரித்துள்ளதால் சிறார்களுக்கு பார்வை பிரச்சினை வெகுவாக அதிகரித்துள்ளதாக கண் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதால், மாணவர்களுக்கு பார்வை தொடர்பில் சோதனைகளை மேற்கொள்ளுமாறு கண்நோய் தொடர்பான விசேட நிபுணர் கே.தயாளன் கூறியுள்ளார்.
சிறு வயதில் பார்வை குறைப்பாடுகள் மற்றும் கண்சார்ந்த ஏனைய குறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கண் நோய் தொடர்பான விசேட நிபுணர் கே.தயாளன் தெரிவித்துள்ளார்.
கண் நோய் தொடர்பான விசேட நிபுணர்களுக்கான பற்றாகுறை, பொருளாதார சிக்கல், கண் நோய்க்கான சிகிச்சை நிலையங்களுக்கான பற்றாகுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கண் நோய் தொடர்பில் பொதுமக்களின் ஈடுபாடு குறைவாக காணப்படுவதாக Ceylon Eye Care Optometric Association இன் விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் கண்நோய் தொடர்பான சர்வதேச நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் மாபெரும் தௌிவூட்டலை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. (TrueCeylon)
