இந்திய மத்திய அரசாங்கத்தின் விவசாய சட்டங்களை மீளப் பெற போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வரும் நிலையிலேயே, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில், விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, ஆரம்பம் முதற்கொண்டே தான் விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருவது குறித்து கருத்துரைத்த அவர், எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.