கொவிட் − 19 தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் தடுப்பூசிகளினால் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட 10,000 பேர் நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“பைசர்” மற்றும் “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசேனிகா” ஆகிய தடுப்பூசிகளே அவுஸ்திரேலியாவில் செலுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், குறித்த தடுப்பூசிகளினால் ஏதேனும் சுகாதார பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பான வைத்திய அறிக்கையுடன் முறைப்பாடு செய்ய முடியும் என அந்த நாட்டு ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தடுப்பூசி பெற்றுக்கொண்ட 79,000 பேருக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், அவர்களில் 10,000 முறைப்பாடுகள் வைத்திய அறிக்கைகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
36.8 மில்லியன் தடுப்பூசிகளை அவுஸ்திரேலிய, தமது நாட்டு பிரஜைகளுக்கு இதுவரை செலுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 9 பேர், உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 60 வயதுக்கு அதிகமானோருக்கே, அதிகளவான சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
“பைசர்” தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 288 பேருக்கு இருதயம் சார்ந்த பிரச்சினைகளும், “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசேனிகா” தடுப்பூசி செலுத்திக்கொண்ட 160 பேருக்கு இரத்த உறைவு பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி செலுத்திக்கொண்டமையின் ஊடாக, ஏதேனும் சுகாதார பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நட்டஈடாக 5000 அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, அவுஸ்திரேலி அரசாங்கத்தினால் நட்டஈடாக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (37 மில்லியன் அமெரிக்க டொலர்) செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.